Tuesday, September 13, 2016

விநாயகர் சதுர்த்தி 


எங்கள் வீட்டில் அதிக முக்கியத்துவம் கொடுத்து  கொண்டாடப்படும் பண்டிகை இது.வருடா வருடம் விநாயகர் சதுர்த்தி அன்று எங்களது சொந்த ஊரான (அப்பா பிறந்த ஊர் ) நெப்புக்கோவிலுக்கு சென்று கொண்டாடுவது எங்கள் வழக்கம்.நெய்குப்பை என்பதே அந்த ஊரின் இயற் பெயர்.பின்னாளில் அந்த பெயர் மருவி நெப்புக்கோவில்  என்று ஆனது . 

நெப்புக்கோவிலும் விநாயகர் சதுர்த்தியும் 

விநாயகர் சதுர்த்தி அன்று காலை நெப்புக்கோவிலுக்கு  பஸ்ஸில் செல்லுவோம் . திருவிழந்தூர் நைனா கடைக்கு எதிரில் பஸ் ஸ்டாப் . 7.15 மணிக்கு 18 A  பஸ் வரும். கருவாட்டு வாசனையும் scent வாசனையும் கலந்த 45 நிமிட பயணம் அது .

நெப்புக்கோவில் சிமெண்ட் பாலம் நாங்கள் இறங்க வேண்டிய bus stop . பஸ்ஸை விட்டு இறங்கி பாலம் தாண்டி செல்ல வேண்டும். வாய்க்காலில் தண்ணீர் சல  சல வென்று ஓடிக்கொண்டிருக்கும். பாலம் கடந்து ஊருக்குள்  நடந்து செல்லும்  வழியில்  உள்ள எங்கள் பிள்ளையார் கோவிலை சுற்றி விட்டு வீட்டுக்கு செல்லுவோம் .

தெரு முழுவது பெரிய பெரிய கோலங்கள். தெருவுக்குள் நுழைந்ததும் ஏதோ தங்கள் வீட்டுக்கு  விருந்தினர் வருவது போல அனைவரும் நலம்  விசாரிப்பார்கள் .  எங்கள் வீடு திண்ணை மற்றும் இரண்டு முற்றம் வைத்த பெரிய ஓட்டு வீடு . கிணறும் பின்னர் தோட்டமும் தனி.

அப்பாக்களும் அண்ணன்களும் கடைகளுக்கு கிளம்பி விட, நாங்கள் அரட்டை கச்சேரியும் ,அம்மாக்கள் பர  பரவென்று என்று வேலையும்  தொடங்குவார்கள்.

அம்மாக்கள்  சமையலில் இருக்க,"கோவிலில் பிள்ளையாருக்கு  தீவார்த்தனை ஆக போகுது . சீக்கிரமா வாங்க" - பெரியப்பா அழைப்பு விடுப்பார்.

கோவிலில்  பிள்ளையாரை  பூவில் அலங்கராம் செய்து அழகாய் அலங்கரித்து இருப்பார்கள்.
தீவார்த்தணை முடிந்து பிள்ளையாரை மேல தாளத்தோடு 4 வீதிக்கும்  ஊர்வலமாக எடுத்து செல்வார்கள் . அப்பாக்களும்,  அண்ணன்களும் பிள்ளையாரோடு ஊர்வலத்தில் செல்வார்கள் .

தெருவில் உள்ள அனைவரும் பிள்ளையாருக்கு தேங்காய் ,பூ ,பழம் தந்து வணங்குவார்கள் .

ஊர்வலம் முடிந்து எல்லாரும் வீட்டுக்கு வந்ததும் வடை பாயாசத்தோடு இலையில் மதிய சாப்பாடு  .
சாப்பிடும்  போது எத்தனை எத்தனை நகைச்சுவை உரையாடல்கள் ! வயிறும், மனதும் நிறைந்தே இருக்கும்.

மாலை கொழுக்கட்டை செய்ய தொடங்குவாராகள் .நானும் கழ்ட்டப்பட்டு கொழுக்கட்டை செய்ய முயற்சிப்பேன்.ஓரு முறை கூட அது கொழுக்கட்டை மாதிரி வந்தது இல்லை . படைத்து முடித்து கொழுக்கட்டை சாப்பிட்ட பின் மாலையே வீடு திரும்பி விடுவோம்.

வரும் வழியில் தெருவுக்கு தெரு கோலா கலமாக அலங்கரிக்கப்பட்ட பிள்ளையர்கள்.எல்லாவற்றயும் வேடிக்கை பார்த்து கொண்டே வீட்டிற்கு வருவோம் .

நிகழ்வுகள் அழகாகும்...உறவுகளோடு இருக்கும் போது !.

















Tuesday, August 9, 2016

ஆடிப்பெருக்கு

இது எனது முதல் பதிவு.
பொதுவாக நம் எல்லா பண்டிகைகளிலும் எனக்கு மிகுந்த நம்பிக்கை உண்டு.
அந்த நம்பிக்கையை கொடுத்தது இந்த நினைவுகளே !
பண்டிகைகளை பற்றிய எனது நினைவுகளை இங்கு பகிர்கிறேன்.
பிழை இருந்தால் மன்னிக்கவும் .
விமர்சனங்கள் வரவேற்கப்  படுகின்றன .

-----__--------__-------__-------__--------__-------


ஆடிப்பெருக்கு

தமிழ் மாதங்களில் நான்காவது மாதமான ஆடி மாதம் மிகவும் உண்ணத மாதமாக கருத படுகிறது..
இந்த மாதத்தில் கடவுளை இயற்கை வளங்களோடும் தண்ணீர் வளங்களோடும் ஓப்பிட்டு பார்க்க படுகிறது. இந்த மாதத்தில் பக்தி மார்க்கமாக ஒருவர் தங்களை இறைஉணர்வுடன் இணைத்து கொள்ள மற்ற எந்த நல்ல விஷயங்களையும் நடத்துவது இல்லை. 

மேலும் அறிவியல் ரீதீயாக, சூரியன் தன்னுடைய திசையயை  திருப்புவதால்  அது  தேவர்களுக்கும் கடவுளுக்கும் இரவு நேரமாக மாறுகிறது. எனவே அவர்களின்  அருளை பெற முடியாது என்பதாலும் நல்ல விஷயங்களை நடத்துவது இல்லை. 

இந்த மாதத்தில் வரும் 18 வது நாள் ஆடிப்  பெருக்காகும் (ஆடி 18).

தமிழ் நாட்டில் பருவ காலம் தொடங்கும் மாதம் இது. பருவ மழை பொழிந்து ஆறுகளில் தண்ணீர் வரத்து அதிகமாகும். விவசாயத்திற்கு தேவையான தண்ணீர் ஆறுகளில் பெருக்கு எடுக்கும். எனவே இயற்கை அன்னைக்கும் காவேரி தாய்க்கும் நன்றி  சொல்லும் விதமாக கொண்டாடப்படும்  பண்டிகை  தான் ஆடிப்  பெருக்கு. காவேரி பாசன பகுதிகளில் சிறப்பாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் இதுவும் ஒன்று. 

மயிலாடுதுறையும் ஆடிப்பெருக்கும் 

சிதம்பரம் மற்றும் கும்பகோணத்தில் இருந்து ஒன்று அல்லது ஒன்றரை மணி நேர பயணத்தில் உள்ளது . மயிலாடுதுறை மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களில் விவசாயத்திற்கு  காவேரி ஆறு பிரதானமாக இருந்தது. ஆடிபெருக்கு மிக சிறப்பாக கொண்டாடப்படும் ஊர்களில் இதுவும் ஒன்று .

ஆடிப்பெருக்கு என்றதும் எங்களுக்கு முதலில் நினைவுக்கு  வருவது பள்ளி விடுமுறை தான்...

அய்யா ஜாலி ஆடிப்பெருக்கு   ...school leave ....

 விடியற்காலை 5 மணிக்கே எழுந்து குளித்து பட்டு பாவாடை  போட்டு ரெடி ஆய்டுவோம்..

அப்பா : (வாக்கிங் பொய்ட்டு திரும்பி வந்து) கூட்டம்  அதிகமா இருக்கு..சீக்கிரம் கிளம்புங்க ..
 (இது பெண்களுக்கான பண்டிகை..ஆண்கள் அங்கு வர மாட்டார்கள் )

அம்மா: அப்ப சீக்கிரம் கிளம்பணுமா .. landline இல்  எல்லாருக்கும் phone பண்ணி  6 மணிக்கே கிளம்பிவிடலாம் ..கூட்டம் நிறைய வருதாம்..

எங்கள் தெருவில் உள்ள எல்லாரையும் கூட்டிகிட்டு ஆற்றங்கரைக்கு படை எடுப்போம்.

"சீக்கிரமா போய் இடத்த புடிக்கணும்..இல்லன்னா கரைக்கு பக்கத்துல இடம் கிடைக்காது ..வாங்க வாங்க சீக்கிரமா ...." - அம்மா

ஒருவழியாக இடத்தை பிடித்து இலையை போட்டு அம்மாக்கள் அனைவரும் படையலை ஆரம்பிப்பார்கள்.

படையலில் வெற்றிலை, பாக்கு,  தேங்காய் ,வாழைப்பழம், கொய்யாப்பழம் ,மாம்பழம் ,பேரிக்காய் ,மாவிளக்கு, காதோலை கருகமணி, மஞ்சள் தடவிய நூல்  இவை எல்லாம் இருக்கும்..பின் பிள்ளையார் மாதிரி பிடித்து வைத்து அதில் அம்மாக்கள்  தங்களது தாலியை வைத்து படைப்பார்கள் .

(கருகமணி என்பது கருப்பு நிறத்தில்  சிறிய வளையல்  போன்று  இருக்கும் ).

படைத்தது முடித்ததும் பாபுஜி அத்தை (கூட்டத்தில் பெரிய அத்தை அவங்க தான்) தாலிக்கு பொட்டு வைத்து மறுபடியும் அம்மாக்கள் கழுத்தில் போட்டு விடுவாங்க.

பின்  காவேரி அம்மனுக்கு வளையல் போடுவதாக நினைத்து காதோலை கருக மணியை ஆற்றிலே விட்டு விடுவார்கள் ...

கடைசியாக  மூன்று  முறை சுற்றி வந்து ஆற்றை வணங்கிய பின் மஞ்சள் நூலை அம்மா கட்டி விடுவா.

"அம்மா கழுத்துல கட்டாதம்மா..நாளைக்கு  schoolக்கு போனா எல்லாரும் கல்யாணம் ஆகிடுச்சான்னு கிண்டல் பண்ணுவாங்க" .

"பசங்க தான் கையில கட்டிக்குவாங்க. நீ கழத்துலதான் கட்டணும்"-அம்மா

சரி..கழுத்திலேயே கட்டி விடு.(மனதிற்குள் ஒரு சிறு புன்னகையுடன் )

எல்லாம் முடிந்து வீட்டிற்கு வந்ததும் மதிய உணவு ஸ்பெஷல் 5 அல்லது 7 வகையான பிசைந்த சாதங்கள் இருக்கும்...

"சக்கர பொங்கல்,தேங்காய் சாதம்,புலி சாதம் ,எலுமிச்சை சாதம் ,தயிர் சாதம் ,வடை ".

 அடுத்த ஸ்பெஷல் குழந்தைகள் அன்று சப்பரம் இழுத்து விளையாடி கொண்டு இருக்கும்.

(சப்பரம் என்பது  அட்டையில் குட்டி தேர் மாதிரி செய்து அதன் உள்ளே சாமி படத்தை வைத்து இழுத்து விளையாடுவது)

"  சப்பரத்தை நானும் வாங்கி இழுக்கவா மா ?"

ஆமாம் டி.. நீ போய் சப்பரம் இழுத்து விளையாட போறியா இப்போ ..போ டி ..( அப்போ 8 வது படித்து கொண்டு இருந்தேன் )

போ மா ..

15 வருடத்துக்கு முன்பு ஆடிப்பெருக்கு இப்படி தான் இருந்தது.

"இப்போது தண்ணீர் வற்றி தான் போனது.. ஆனால் நினைவுகள் மட்டும் வற்றாத ஜீவ நதியாய் ."

இயற்கையும், வளமும் பசுமையாக இருந்த வரை பண்டிகைகளும் பசுமையாகத்தான் இருந்தன.